வீட்டில்
********
1. மாத்திரைகளை தொடர்ந்து ஒழுங்காக சாப்பிட வேண்டும். மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மாத்திரைகளை மாற்றுவதோ, அல்லது குறைப்பதோ கூடாது. போதுமான அளவு மாத்திரைகளை கையிருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும். மாத்திரை தீரும் வரை காத்திருக்காமல், 4 நாட்களுக்கு முன்னரே வாங்கிவிட வேண்டும்.
2. சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்றவை இருந்தால், அந்த நோய்களுக்கான சிகிச்சையை முறையாக எடுக்க வேண்டும். சிறிது கூட தாமதிக்கக்கூடாது. இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய் போன்றவற்றிற்கு சிகிச்சை எடுக்க வேண்டியிருந்தால், உணவுக்கட்டுப்பாடு தேவை. தங்களின் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர், குடும்ப மருத்துவர் ஆகியோரின் ஆலோசனைகளை கடைபிடிக்கவும்
3. வேறு எந்த நோயும் இல்லாதவர்கள் கூட அதிக அளவு சர்க்கரை, மாவுச்சத்து ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்
4. ஒரு சிறு காகிதத்தில் தங்களின் பெயர், வலிப்பு நோயின் சரியான பெயர், எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளின் பெயர், குடும்ப உறுப்பினர்களின் பெயர் மற்றும் அலைபேசி எண், குடும்ப மருத்துவரின் பெயர் மற்றும் எண் ஆகியவற்றை எழுதி (அல்லது தட்டச்சு செய்து) அதை ஒரு கண்ணாடிஉறைக்குள் (அல்லது லேமினேட் செய்து) சட்டைப்பையில் வைத்துக்கொள்ளவும்
5. தினமும் குளிக்கவும். தலைக்கு குளிக்கலாம்.
ஷவரில் குளிக்கலாம். அல்லது வாளியில் நீர் பிடித்து குளிக்கலாம்
குளியல் தொட்டியில் குளிப்பதை தவிர்க்க வேண்டும்.
குளியலறை/ கழிப்பறை கதவினை சாத்தவும், ஆனால் உள்ளிருந்து தாழ்ப்பாள் போடக்கூடாது.
6. குளியலறைக்குள் (அல்லது நீருக்கு அருகில்) மின் சாதனங்களை பயன்படுத்த வேண்டாம். வலிப்பு ஏற்பட்டால் இவை நீருக்குள் விழுந்தால் மின் அதிர்ச்சி ஏற்பட (ஷாக் அடிக்க) வாய்ப்பு உள்ளது
7. அறைக்குள் தனியாக இருக்கும் போது உட்புறம் தாழ்ப்பாள் போடக்கூடாது. இரு பக்கமும் திறக்கும் பூட்டுகளையே வீட்டில் பயன்படுத்தவும்
8. கண் கண்ணாடி அணிபவராக இருந்தால் உங்கள் லென்ஸ்களை உடையாத லென்ஸ்களாக மாற்றுங்கள்
9. வீட்டினுள் முடிந்த அளவு கண்ணாடிகளை தவிர்த்து விட்டு, ப்ளாஸ்டிக் போன்ற உடையாத பொருட்களை பயன்படுத்த வேண்டும்
உதாரனமாக : கண்ணாடி கோப்பைகளை பயன்படுத்தக்கூடாது. வலிப்பின் போது இவை உடைந்து அதிக பாதிப்புகளை ஏற்படுத்தலாம்
10. சமையல் செய்யும் போது, பாத்திரங்களில் கைப்பிடி, சுவற்றை நோக்கி இருக்கும்படி வைத்துக்கொள்ளவும். ஒருவேலை வலிப்பு ஏற்பட்டால் கூட, உங்கள் கை அந்த கைப்பிடியில் பட்டு, கொதிக்கும் குழம்பு உங்கள் மேல் விழும் வாய்ப்பை அளிக்கக்கூடாது
அலுவலகத்தில்
*****************
11. உங்கள் உடன் பணிபுரிபவர்கள் மற்றும் மேலதிகாரிகள் ஆகியோருக்கு இதை தெரியப்படுத்துங்கள். 4ஆம் கருத்தில் கூறிய காகிதத்தின் ஒரு நகலை அவர்களுக்கு அளிப்பது சிறந்தது
12. கூர்மையான கருவிகள் பயன்படுத்தக்கூடாது
வெளியில் செல்லும் போது
*****************************
13. மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் வாகனம் ஓட்டக்கூடாது
14. ஏரி, குளம், கிணறு, அருவி ஆகியவற்றினுள் தனியாக செல்லக்கூடாது. நீச்சல் தெரிந்த நபர்கள் அருகில் இருந்தால் மட்டுமே நீர் நிலைகளுக்குள் செல்ல வேண்டும்
பொதுவாக
************
15. ஒரு நாட்குறிப்பேட்டில் (அல்லது கூகிள் காலெண்டரில்) வலிப்பு ஏற்படும் தேதி, நேரம் ஆகியவற்றை குறித்து வைத்துக்கொள்ளவும்
16. ஒழுங்கான தூக்கம் வேண்டும். முறையான நேரத்தில் தூங்க செல்வது நலம்.
17. வலிப்பு அறிகுறியை தோற்றுவிக்கும் காரணிகளை முடிந்தவரை தவிர்க்கவேண்டும். சிலருக்கு தூங்காவிட்டால் வலிப்பு வரும். அவர்கள் முறையாக தூங்க வேண்டும். சிலருக்கு விளக்கும் பளிச்சிட்டால் வலிப்பு வரும். அவர்கள் அது போல் பளிச்சிடும் விளக்குகளை பார்ப்பதை தவிர்க்க வேண்டும்
18. வலிப்பு ஏற்பட்டாலோ அல்லது தலைவலி, பார்வை இரண்டாக தெரிவது, வாந்தி ஆகியவை ஏற்பட்டாலோ உடனடியாக 108 அழைத்து மருத்துவமனைக்கு வரவும்
No comments:
Post a Comment